X

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 4-ந் தேதி (இன்று) முதல் 7-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியிலும், 5-ந் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், 6-ந் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், 7-ந் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

8, 9-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் அளவிலும் வெப்பநிலை இருக்கும். இலங்கை கடலோர பகுதிகள், அதையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 7-ந் தேதி வரை சூறைக்காற்று வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. செங்கத்தில் 10 செ.மீ. மழையும், ஆர்.கே.பேட்டை, வானூரில் தலா 9 செ.மீ. மழையும், வெங்கூரில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு அல்லது நாளை மறுநாள் (புதன்கிழமை) காலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: tamil news