நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது – எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடிவு
அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமியின் கை தொடர்ந்து ஓங்கி உள்ளது. இதன்காரணமாக சமீபத்தில் அவர் பல்வேறு சட்ட ரீதியிலான சவால்களை உடைத்தெறிந்துவிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க. நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அணுகி உள்ளார். அதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுபோன்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு நாளைய செயற்குழு கூட்டத்தில் ஒப்புதலும், அங்கீகாரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் அ.தி.மு.க.வில் கொள்கை ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் செயற்குழு கூட்டத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் எத்தனை தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடலாம் என்று நாளை தீர்மானிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் பற்றியும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
தேர்தல் கமிஷனில் புதிய பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்க உள்ளனர். நாளை செயற்குழு கூட்டத்தில் சுமார் 300 பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதலான அதிகாரம் வழங்கப்படுவதால் எதிர்வரும் நாட்களில் அவர் கட்சி பணிகளில் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவார். எனவே நாளை நடைபெறும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.