நாளையுடன் கத்திரி வெயில் முடிகிறது

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்துவந்த நிலையில், 5-ந்தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. கோடை வெயிலுக்கே நொந்து போயிருந்த மக்கள், தகிக்கும் ‘கத்திரி’ வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளாகினர்.

சாலையில் வீசிய அனல் காற்றால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். கத்திரி வெயிலுக்கு பயந்து பகலில் வீடுகளிலேயே மக்கள் பலர் முடங்கினர். சாலையில் செல்வோரில் பெரும்பாலானோர் குடைபிடித்தபடி செல்வதை பார்க்க முடிகிறது. இளம்பெண்கள் துப்பட்டாவை சுற்றியும், ஆண்கள் கைக்குட்டை கொண்டு முகத்தை மறைத்தபடியும் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.

பொதுவாகவே கோடைகாலத்தில் அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு ஆறுதலாக அமையும். ஆனால் இந்தமுறை குறிப்பிட்டு சொல்லும்படி தமிழகத்தில் மழை இல்லை. குறிப்பாக சென்னையில் மழைக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ‘பானி’ புயலும் திசைமாறி மழையை கொடுக்கவில்லை.

ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கத்திரி வெயில் காலம் அமைந்துவிட்டது.

கத்திரி வெயில் காரணமாக சென்னை, மதுரை, கரூர், தர்மபுரி, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், நாகை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வறுத்து எடுத்தது. பல நாட்களாக திருத்தணியிலேயே அதிகபட்ச வெயில் பதிவானது.

இந்நிலையில் மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் காலம் நாளையுடன் (புதன்கிழமை) விடைபெறுகிறது. இதையடுத்து வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news