நாய் செய்யும் சாகசங்கள் பிரமிப்பாக இருக்கும் – ‘வாட்ச்மேன்’ படம் குறித்து ஜிவி பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இந்த அண்டு, சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன.
குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12-ம்தேதி ரிலீசாக இருக்கிறது.
இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும்.
நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னை காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கி கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும். பயமாக இருக்கும்’ என்றார்.