நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க நயன்தாரா முடிவு
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்து கதை கேட்டு வருகிறாராம் நயன்தாரா. தற்போது அவர் கைவசம் உள்ள நெற்றிக்கண் படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.