பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளாவில் பிரசாரம் தொடங்கினார். இதற்காக மாநிலம் முழுவதும் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார்.
அந்தவகையில் திருச்சூர் அருகே உள்ள திரிப்ரயார் பகுதியில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் தேசிய மீனவர் பாராளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மீனவர்கள் ராகுல் காந்தியிடம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:
மீனவர்கள் விவகாரத்தில் என்னுடைய உறுதி என்னவென்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெறும் தருணத்தில், நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும் டெல்லியில் தங்களுக்கான தனி அமைச்சகத்தை பெறுவார்கள். இதற்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதை தினந்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
நான் மோடியை போல பொய் வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். எனது உரையை நீங்கள் கவனித்துப்பாருங்கள். நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன் என்றால், அது குறித்து முடிவு செய்தே பேசுவேன்.
இன்றைய மத்திய அரசில் அனில் அம்பானி அல்லது நிரவ் மோடிக்குத்தான் ஏராளமான செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை 10 வினாடிக்குள் நிறைவேற்ற முடிகிறது. அதை சத்தம் போட்டும் கேட்கவேண்டாம், ரகசியமாக கேட்டாலே கிடைத்து விடுகிறது.
ஆனால் மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட எளிய மனிதர்கள், தங்களை கவனிக்குமாறு அரசுக்கு முன் நின்று கத்துகிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை மோடி கேட்பதில்லை. தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் செவிசாய்ப்பார்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
முன்னதாக காசர்கோட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ், சரத்லால் ஆகியோரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமாரின் வீட்டுக்கும் அவர் சென்றார்.
இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களால் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் சுகைபின் குடும்பத்தினரை கண்ணூர் விமான நிலையத்தில் ராகுல் காந்தி சந்தித்தார். சுமார் ½ மணி நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி வழங்கும் என உறுதியளித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பயணத்தின் போது கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.