யூடியூப் நேர்காணல் ஒன்றில் தன்னை பற்றி தெரிவிக்கப்பட்ட அவதூறு கருத்துக்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனக்காக அதிகளவில் பணம் செலவிடப்படுவதாக பொய் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக பேசுவோர், ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவதற்கு முன்பு அவர்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மை தானா என்று உறுதிப்படுத்துவர் என்ற நினைப்பில் நான் அமைதி காத்தேன்.”
“எனது குடும்பமும், நானும் கடந்த சில நாட்களாக அளவில்லா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதுபோன்ற போலி செய்திளை பரப்பும் முன் தயவு செய்து யோசியுங்கள். நான் மிகவும் ஒழுக்கமான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். எனது 16 வயதில் இருந்தே எனக்கான செலவீனங்களை நானே பார்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன். எனது குடும்பம் இப்போதும் துபாயில் தான் வசிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்.”
“திரைத்துறையில், நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ அல்லது கதாநாயகனிடமோ படத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்றோ பட வாய்ப்புகளை கொடுங்கள் என்றோ உதவி கேட்டதில்லை. நான் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பணியாற்ற வேண்டும் என்றோ அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ நான் எப்போதும் பேராசை கொண்டதில்லை.”
“இதுவரை என்னை தொடர்புப்படுத்தி பேசப்பட்ட விவரங்கள் எதிலும் உண்மையில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002-ம் ஆண்டில் இருந்து துபாயில் நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். 2013-ம் ஆண்டில் இருந்து எனக்கு ரேசிங் மீது ஆர்வம் அதிகரித்தது. மேலும் சென்னையில் நடத்தப்படும் ரேஸ் பந்தயங்கள் பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது.”
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் மிக முக்கியமானவர் அல்ல. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது வாழ்க்கையில் நானும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறேன். மனரீதியாக நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். உங்கள் குடும்பங்களில் இருக்கும் பெண்களை போன்றே, நானும் கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்.”
“அவர்கள் இதுபோன்று மேலும் என்மீது அவதூறு பரப்ப மாட்டார்கள் என்றும் ஊடகத்துறையில் இன்னமும் மனிதநேயம் மிஞ்சி இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த விவகாரத்தை நான் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன்.”
“ஒரு குடும்பத்தின் நன்மதிப்பை கெடுப்பதற்கு முன்பு நீங்கள் பெறும் தகவல்களை உறுதிப்படுத்துமாறு ஊடகத்தினரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். உண்மை ஜெயிக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.