Tamilசெய்திகள்

நான் பூரண நலத்துடன் இருக்கிறேன் – பிரதமர் மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் பதிலடி

நேற்று ஒடிசாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது. உடல்நலம் குன்றியதற்கு அவரை பின்னால் இருந்து இயக்கும் லாபிதான் காரணம். ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதற்கான காரணம் குறித்து தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும்” என்று பேசியுள்ளார். மோடியின் இக்கருத்து ஒடிசாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதில் அளித்து பேசியுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தான் பூரண நலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பரப்புரையிலும் தான் ஈடுபட்டு வருவதாகவும், பிரதமர் மோடிக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால் எனக்கு போன் செய்து விசாரித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மோடியின் பேச்சு தொடர்பாக விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என மோடி பேசியுள்ளார். முதலில் ஜெயலலிதா உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என்று தர்ம யுத்தம் நடைபெற்றதே அதற்கு மோடி பதில் சொல்வாரா? ஒரு முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பது ஒரு பிரதமருக்கு தெரியாதா? ஜெ மரணத்தில் மர்மம் எனில் காரணம் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.