நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும் – குஷ்பு
உலக மகளிர் தின விழா காங்கிரஸ் கட்சி சார்பில் ராயபுரத்தில் கொண்டாடப்பட்டது.
சென்னை ராயபுரம் மக்கள் விழிப்புணர்வு மையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரா.மனோகர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியதோ அதற்கு நேர்மையாக தான் நாம் செயல்பட வேண்டும். உச்சநீதி மன்றம் சார்பாக பென்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு பிரச்சனை என்றால் அந்த பென்ச் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. உச்சநீதிமன்ற தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது.
நான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராகுல்காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி கோவில்களில் குலதெய்வமாக இருப்பது போன்று விளம்பர செய்து வருகிறார்கள். மோடியும் எடப்பாடி பழனிசாமியும் விளம்பரம் பைத்தியம் பிடித்தவர்கள் போல இருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்கள் பண ரீதியாகவும் மன ரீதியாகவும் மத ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்துரைத்து பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
அபிநந்தனின் புகைப்படத்தை வைத்து பா.ஜ.க.வினர் அரசியல் செய்வது அவமானமானது. அபிநந்தன் புகைப்படத்தை வாகனங்களில் வைத்துக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபடுவது முறையானதல்ல. பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்ட அபிநந்தன் விடுவிக்கப்பட்டதால் பா.ஜ.க.விற்கு சாதகமாக 28 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என அமைச்சர்கள் கூறியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்படி சொல்வது தவறு என்றும் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.