டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் கடந்த மே 4ம் தேதி திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியவாறு ஓடிவந்து வாகனத்தின் மீது ஏறிநின்று, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார்.
அதன்பின்னர் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற அந்த நபரை மடக்கி பிடித்து போலீசரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது டெல்லி காவல்துறையின் கிரிமினல் சட்டப்பிரிவு 107/5-ன்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த மே 5ம் தேதி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைதான சுரேஷை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுரேஷ் கூறுகையில், ‘ஒரு மாநிலத்தின் முதல்வரை மதிக்காமல், நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை. எப்படி அறைந்தேன் எனவும் தெரியவில்லை. நான் எந்த கட்சியினையும் சார்ந்தவன் அல்ல. நான் செய்த இந்த தவறின் பின்னணியில் யாரும் இல்லை.
என் பின்னால் நின்றுக் கொண்டு யாரும் இவ்வாறு செய்யச்சொல்லி தூண்டவில்லை. இச்சம்பவத்திற்கு நானே முழு பொறுப்பு. நான் போலீசாரின் கஸ்டடியில் இருக்கும்போதும் எனக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. போலீசார் என்னிடம் ஒன்றை தான் கூறினார்கள். நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை தான். அதனை நான் உணர்ந்தேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என கூறினார்.