X

நான் கலைஞரின் மகன். சொன்னதைதான் செய்வேன் – மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புளியங்குளம் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். புளியங்குளத்தில் நடந்த திண்ணை பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

நான் கலைஞரின் மகன். சொன்னதைதான் செய்வேன். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றித்தரப்படும். தி.மு.க. என்றைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனை பேணுகின்ற இயக்கம்தான் தி.மு.க.

தி.மு.க. ஆட்சியில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி தந்தது தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களால் எந்த அளவுக்கு மக்கள் பணி செய்ய முடியுமோ அந்த வகையில் பணியாற்றி வருகிறோம்.

விரைவில் தமிழகத்தில் விடிவுகாலம் பிறக்க உள்ளது. அதற்கு திருப்பரங்குன்றத்தில் சூரியன் உதிக்க வேண்டும். எனவே நீங்கள் எல்லோரும் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்கிற நரேந்திர மோடியும், மாநிலத்தை ஆளுகின்ற எடப்பாடியும் எதிராக செயல்படுகிறார்கள்.

பிரதமர் மோடி வெளி நாட்டுவாழ் பிரதமர் போல இருக்கிறார். அவருக்கு இந்தியா மேல் அக்கறை இல்லை. தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் மோடி ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுகிறார்.

உலகம் சுற்றும் நரேந்திர மோடி இதுவரை வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 23-ந்தேதிக்கு பிறகு மத்தியில் பிரதமராக மோடி இருக்க மாட்டார். அதுபோல தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்க மாட்டார்.

மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற நல்லாட்சி அமையும். மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news