நான் இன்னும் பா.ஜ.க தோழமையில் தான் இருக்கிறேன் – பாரி வேந்தர் பேட்டி

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:

ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் இன்னும் பா.ஜனதா தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

1 மாதத்துக்கு முன்பாக பியூஸ்கோயல் என்னை டெல்லிக்கு அழைத்து பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேசினார். அப்போது நமது கூட்டணி தொடர்கிறது என்று அவருக்கு சென்னேன். என்னிடம் எந்த தொகுதி என்றும் கேட்டார். அதை அவருக்கு குறித்தும் கொடுத்திருக்கிறேன். அதன்பிறகு எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

திருச்சியில் நான் கமல்ஹாசனுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் தங்கியிருந்த ஓட்டலில் அவர் தங்கினார். அப்போது என்னை பார்த்தார். நம் இருவருக்கும் ஒரே கொள்கையாக இருக்கிறது என்பதால் நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று கேட்டார். செயல்படலாமே என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து மீண்டும் பேசலாம் என்று சொன்னார். பேசினோம். அது அந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பா.ஜனதா என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை நான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நான் இன்னும் பா.ஜனதா தோழமையில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க.விடம் பேசி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னால் எனக்கு தயக்கம் இல்லை. அந்த முடிவு பா.ஜனதா மூலமாக வரவேண்டும்.

3-வது அணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பா.ஜனதா எனக்கு சரியான முடிவு சொல்லாவிட்டால் 3-வது அணியில் நான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools