நான் ஆரோக்கியமாகவும், உயிருடனும் இருக்கிறேன்! – சுரேஷ் ரய்னா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

தற்போது அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரைப் பற்றி வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ரெய்னா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என்பதுதான் அந்த வதந்தி. இதனால் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னாவுக்கு தினந்தோறும் போனில் நண்பர்கள் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடந்த சில நாட்களாக நான் கார் விபத்தில் இறந்துவிட்டதாக போலியான செய்தி வந்த வண்ணம் உள்ளது. இது என்னைக் காயப்படுத்தியுள்ளது. இது எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை புறக்கணியுங்கள். கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன். ‘யூ டியூப்’ வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தவறான காட்சிகளை நீக்குமாறு புகார் அளித்துள்ளேன். இதுதொடர்பாக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools