நான் ஆண்டர்சனின் ரசிகன் – டேல் ஸ்டெயின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின். பந்தை அவுட்-ஸ்விங் செய்வதில் வல்லவர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஆடுகளத்தில் லெக்-ஸ்டம்பிற்கு நேராக பந்தை பிட்ச் செய்து ஆஃப் ஸ்டெம்பிற்கு வெளியே பந்தை கொண்டு செல்வதில் வல்லவர்.

36 வயதான ஸ்டெயின் 2004-ம் ஆண்டில் இருந்து 2019 வரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 26 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேலும், 5 முறை 10 விக்கெட்டுகளுக்கு மேலும் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.95 ஆகும்.

2007 முதல் 2013 வரையில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இந்த காலக்கட்டத்தில் ஐசிசி-யின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் நீடித்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை சரிய ஆரம்பித்தது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (வயது 37). 2003-ல் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கிய ஆண்டர்சன் இன்னும் விளையாடி வருகிறார். இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 28 முறை ஐந்து விக்கெட்டும், 3 முறை 10 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். பந்தை இன்-ஸ்விங் செய்வதில் வல்லவர்.

இரண்டு பேரும் ஒரே காலக்கட்டத்தில் விளையாடியதால் இருவரில் யார் சிறந்த பந்து வீச்சாளர் என்ற விவாதம் எல்லாம் நடைபெற்றது. பெரும்பாலான ரசிகர்கள் டேல் ஸ்டெயின்தான் சிறந்த பந்து வீச்சாளர் என்பார்கள்.

ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்று பந்தை இன்-ஸ்விங் செய்ய முடியாது என்று டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘நான் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை பார்த்துள்ளேன். அவர் மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளர். அவரை போன்று என்னால் மிகப்பெரிய அளவில் பந்தை இன்-ஸ்விங் செய்ய இயலாது. நான் ஆண்டர்சனின் ரசிகர். இதில் பொய் சொல்ல ஒன்றுமில்லை’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news