நாட்டை வழி நடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது – முதல்வர் குமாரசாமி

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய பா.ஜனதா தலைமையிலான ஆட்சியை வருகிற தேர்தலில் தோற்கடிப்பதற்காக 22 எதிர்க்கட்சிகளை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தினார்.

இதில் கர்நாடக முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவருமான குமாரசாமியும் கலந்துகொண்டார். குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

மம்தா பானர்ஜி இந்த மகாகூட்டணியை திரட்டி பொதுக்கூட்டத்தை நடத்தி மிகப்பெரிய வேலையை செய்துள்ளார். ஏன் இடதுசாரி கட்சிகளைக்கூட அவர் இந்த கூட்டணியில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது பா.ஜனதா அரசுக்கு எதிரான அவரது போராட்ட தந்திரத்தையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது. இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர் சில சமரசங்களை செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறார்.

தலைமையை முடிவு செய்வது தேர்தல் வெற்றிக்கு ஒரு அளவுகோல் இல்லை. பிரதமர் நரேந்திரமோடி அரசின் நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல மாநிலங்களிலும் அவர்களது சொந்த பிரச்சினைகள் உள்ளன. எனவே தேர்தலுக்கு முன்பு தலைவரை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய திட்டங்களை கொண்டுள்ள வலுவான தலைவர்கள் இருக்கிறார்கள். இப்போதைய அரசு தோல்வியடைந்த திட்டங்களில் அவர்கள் முன்னேற்றம் காணச் செய்வார்கள். தேர்தல் முடிந்த பின்னர் நாங்கள் கூடி தலைவரை தேர்வு செய்வோம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. 1977-ம் ஆண்டில் பிரதமர் இந்திராகாந்திக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி ஏற்பட்டது போன்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி மிக எளிமையாகவும், மிகச்சிறந்த நிர்வாகியாகவும் இருக்கிறார். அவருக்கு இந்த நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் இருப்பதாக நான் நம்புகிறேன். அவர் ஏற்கனவே மேற்கு வங்காளத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி இதனை நிரூபித்து இருக்கிறார்.

இந்த மகா கூட்டணி தேசிய கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் தேசிய கட்சி உறுப்பினர்களைவிட வலிமையான மாநில தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த மாநில கட்சிகள் தேர்தலில் முக்கிய பங்காற்றும். இந்த முறை மக்கள் அவர்களை வெற்றி பெறச் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் சந்திரசேகர்ராவ் போன்ற மேலும் பல தலைவர்கள் இந்த கூட்டணியில் சேருவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools