இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவில், அகில இந்திய அவை தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இது, 2 நாள் மாநாடு ஆகும். மாநாட்டில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங், முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில சட்டசபைகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-
பாராளுமன்றம் பல்வேறு பிரச்சினைகளால் அடிக்கடி முடங்குகிறது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் நடத்தை, இந்திய பண்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். சபைகளின் பாரம்பரியமும், இயங்கும் முறையும் இந்தியத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளும், சட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலான நேரத்தை அரசியலுக்கே ஒதுக்குகின்றனர். அவர்கள் சமூகத்துக்கு ஏதேனும் சிறப்பாக செய்வதற்காக சபையில் ஆண்டுக்கு 3 அல்லது 4 நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும். அந்த நாட்களில், தரமான, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும்.
அந்த நேரத்தில் மற்றவர்கள் மீது அரசியல் சேறு வாரி இறைக்கக்கூடாது. கண்ணியத்தையும், அக்கறையையும் பின்பற்ற வேண்டும். இளம் உறுப்பினர்களுக்கும், பெண் உறுப்பினர்களுக்கும் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் இருந்து சாமானியர்கள் வரை தங்கள் கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை பலமடங்கு வேகத்தில் கொண்டு செல்வதற்கு இதுதான் தாரக மந்திரம்.
நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல அனைவரது கூட்டு முயற்சி அவசியம். கூட்டு முயற்சி வெற்றி பெறும் என்பதற்கு கொரோனாவுக்கு எதிரான போர், வரலாற்று சிறப்புமிக்க உதாரணம்.
அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு விழா வந்து விடும். எனவே, அடுத்த 25 ஆண்டுகள், நாட்டுக்கு முக்கியமானவை. அதனால், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சொல்லிலும், செயலிலும் கடமைக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த 25 ஆண்டுகளில், நாம் முழு அர்ப்பணிப்புடன் ஒரு தாரக மந்திரத்தை நிறைவேற்றுவோம். அந்த தாரக மந்திரம்தான், கடமை, கடமை, கடமை.
நமது நாடு வேற்றுமை நிறைந்தது. நமது ஒற்றுமைதான் இந்த வேற்றுைமயை பாதுகாத்து வருகிறது. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்து முரண்பாடான குரல் எழாமல் விழிப்புடன் இருப்பது சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.