Tamilசெய்திகள்

நாட்டை பிரிப்பது பற்றி யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் – மல்லிகார்ஜூன கார்கே

பாராளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் அலுவல் பணி இன்று தொடங்கியது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் பேசும்போது “நாட்டை பிரிப்பது (தனிநாடு கோரிக்கை) பற்றி யார் பேசினாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அது எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் அனைவரும் ஒன்று.

இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக நேற்று, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட்டில் தென்மாநிலங்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது.

“வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும்,” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் தனது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கூட மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.