நாட்டில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம் – பிரதமர் மோடி பேச்சு
பாராளுமன்ற தேர்தல் பிரசாராத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். பாகற்காயின் சுவை நெய்யில் பொறித்தாலும், சர்க்கரையுடன் கலந்தாலும் மாறாது. அதுபோல தான் காங்கிரஸ் கட்சியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாராத்திற்காக முதல் முறையாக மகராஷ்டிரா மாநிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நாட்டில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம். நக்சல், காஷ்மீர் விவகாரம் என மதத்தின் பேரில் நாடு பிளவுபட காரணம் யார்? ராமர் கோவில் கட்டுமானத்தை எதிர்த்து, ராமர் வாழ்ந்தாரா என்று கேள்வி எழுப்பியது யார்? ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டியது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. எனினும், நாட்டில் நிலவிய எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. நக்சல் பிரச்சினை பெருமளவில் குறைந்துவிட்டது. வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகுபாடு காட்டியது. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் முஸ்லீம் லீக் தாக்கம் உள்ளது.”
“அவர்கள் மக்களின் எதிர்காலத்துடன் விளையாடினர். புதிய விமான நிலையமோ அல்லது இதர திட்டப் பணிகளோ வளர்ச்சி திட்டங்களுக்கு கமிஷன் வசூலிப்பதும், கமிஷன் கிடைக்காத திட்டங்களை தடுத்து நிறுத்துவதையும் செய்து வந்தனர். அவர்களின் ஒரே குறிக்கோள் – கமிஷன் வசூலிப்பது அல்லது திட்டங்களை தடுத்து நிறுத்துவது மட்டும்தான்,” என்று தெரிவித்தார்.