காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரையை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நேற்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அங்கு பேசிய ராகுல்காந்தி, நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளது என்றார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும்,ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக மைசூரில் உள்ள சுத்தூர் மடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதி சிவராத்திரி ஸ்ரீ தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் அவரது தாயார் சோனியா காந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர். இதற்காக சோனியா காந்தி மைசூர் விமான நிலையத்திற்கு இன்று வந்தார்.
அவரை அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிவகுமார் வரவேற்றார். 6ந் தேதி மாண்டியாவில் நடைபெறும் பாத யாத்திரையில் சோனியாகாந்தியும் பங்கேற்பார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.