X

நாட்டின் 554 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத் ரெயில் நிலையம்’ திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களை எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு ‘அம்ரித் பாரத் ரெயில் நிலையம்’ என்ற திட்டத்தின் கீழ் நவீனமாக மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி – மின்படிகட்டு, உள்ளூா் தயாரிப்பை முன்னிலை படுத்தும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் உள்ள 1,318 ரெயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நவீனமாக மேம்படுத்த தோ்ந்தெடுக் கப்பட்டுள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் முதல்கட்டமாக கடந்த ஆண்டு 508 ரெயில் நிலை யங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். அந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலக தரத்தில் நவீனமாக மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி இன்று (திங்கட்கிழமை) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். காணொளி காட்சி மூலம் அவர் 554 ரெயில் நிலையங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் நடந்த இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அஸ்வின் வைஷ்ணவ், ராவ் சாககேப் பாட்டில் தன்வே, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடு முழுவதும் அந்தந்த மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டிய 554 ரெயில் நிலையங்களில் தமிழகத்தில் 34 ரெயில் நிலையங்கள் நவீனமாக மேம்படுத்தப்படுகின்றன. இந்த 34 ரெயில் நிலையங்களில் சென்னை கோட்டத்தில் 7 ரெயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரெயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரெயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரெயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரெயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் தெற்கு ரெயில்வே சாா்பில் 32 ரெயில் நிலையங்கள், தென்மேற்கு ரெயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரெயில் ரெயில் நிலையங்கள் என 34 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டிய தமிழகத்தில் உள்ள 34 மேம்படுத்தப்படும் ரெயில் நிலையங்கள் விவரம் வருமாறு:-

1. திருநெல்வேலி சந்திப்பு 2. கும்பகோணம் 3. ஈரோடு சந்திப்பு 4. அம்பத்தூர் 5. திண்டுக்கல் சந்திப்பு 6. ஓசூர் 7. தர்மபுரி 8. திருச்செந்தூர் 9. மேட்டுப்பாளையம் 10. மாம்பலம் 11. சென்னைக் கடற்கரை 12. பரங்கிமலை 13. திருப்பத்தூர் 14. புதுக்கோட்டை 15. கிண்டி 16. நாமக்கல் 17. பழனி 18. காரைக்குடி சந்திப்பு 19. மொரப்பூர் 20. சின்னசேலம் 21. கோவை வடக்கு 22. பொம்மிடி 23. ராஜபாளையம் 24. ராமநாதபுரம் 25. சென்னைப் பூங்கா 26.பொள்ளாச்சி சந்திப்பு 27. கோவில்பட்டி 28. தூத்துக்குடி 29. அம்பாசமுத்திரம் 30. பரமக்குடி 31. மணப்பாறை 32.விருத்தாசலம் சந்திப்பு 33. திருவாரூர் சந்திப்பு 34. திருவண்ணாமலை.

இதில் திருநெல்வேலி ரெயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரெயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூா் ரெயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரெயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. மற்ற ரெயில் நிலையங்களை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்தப் பணிகளை இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த விழாவில் சென்னையில் கடற்கரை, கிண்டி, பரங்கிமலை ஆகிய 3 இடங்களிலும் அதிகாரிகள் பங்கேற்றனர். பரங்கிமலையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அம்பத்தூர் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று பகல் 11 மணி முதல் மதியம் 12 மணி வரை இதற்கான விழா நடந்தது.

மத்திய அரசால் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்களும் சர்வதேச தரத்துக்கு இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் திறந்தவெளி கூரை அமைக்கப்படும். ரெயில் பயணிகள் பொருட்கள் வாங்குவதற்கான ஷாப்பிங் மண்டலம் உருவாக்கப்படும். பயணிகள் ரெயில் நிலையங்களில் விரும்பிய உணவுகளை சாப்பிடுவதற்கு உயர்ரக உணவுகள் கொண்ட ஓட்டல்களுடன் உணவு சந்தையும் அமைக்கப்படும். குழந்தைகள் விளையாடும் பூங்காவும் இந்த ரெயில் நிலையங்களில் இடம் பெற்று இருக்கும்.

மேலும் பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையத்துக்குள் செல்லுவதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு ஒரு வழியும் என தனித்தனி வாசல்கள் அமைக்கப்படும். ரெயில் நிலையம் அருகிலேயே பல அடுக்குகள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் இடம் உருவாக்கப்படும். வயதான பயணிகளை கருத்தில் கொண்டு லிப்ட் வசதிகளும் செய்யப்படும். இவை தவிர நகரும் படிக்கட்டுகள், சொகுசு ஓய்வு அறைகள், காத்திருப்பு கூடங்கள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும். இதன் மூலம் இந்த நவீன ரெயில் நிலையங்கள் ஒருங்கிணைந்த பல வகை இணைப்புகளுடன் அந்தந்த பகுதி சமூக பொருளாதார செயல்பாடுகளின் மையமாகவும் உருவெடுக்கும்.

பிரதமர் மோடி இன்று 1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.41 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் 121 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் தமிழகத்தில் அமைய உள்ளன. பிரதமர் மோடி இந்த சாலை மேம்பால திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார். இந்த திட்டங்கள் மூலம் முக்கிய பகுதிகளில் ரெயில் போக்குவரத்து தடையில்லாமல் இயங்கும். மேலும் பயணிகள் ரெயில் நிலையங்களை கடப்பதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

இதனால் பிரதமர் மோடியின் இன்றைய அடிக்கல் நாட்டிய திட்டங்கள் தமிழகத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.