Tamilசெய்திகள்

நாட்டின் முதலாவது கடல்பாசி பூங்கா தமிழகத்தில் உருவாக்கபட உள்ளது – அமைச்சர் எல்.முருகன் தகவல்

பிரதமர் மோடி தலைமையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் முதலாவது கடல்பாசி பூங்கா தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ளது என்றார்.

சென்னை காசிமேடு உட்பட நாடு முழுவதும் ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு விலையில்லா எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 32 லட்சம் குடும்பங்கள் விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பை பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் பேரும்,  விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ்  46 லட்சம் பேரும் தமிழகத்தில் மட்டும் பயனடைந்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு  கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

நடைபாதை வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  சாதனை விளக்க புத்தகங்களையும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டார்.