காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. 18 மாதங்களுக்கு பிறகு நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசியதாவது:-
ஜூன் 30-க்குள் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். இதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் கொரோனாவின் 2-வது அலை காரணமாக இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. கட்சியின் தேர்தல் குறித்து ஒருமுறை தெளிவை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும்.
காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம். கட்சியின் விவகாரங்களை பற்றி மூத்த தலைவர்கள் (கபில் சிபல், குலாம்நபி ஆசாத்) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க வேண்டாம்.
கட்சி தலைமையிடம் ஊடகங்கள் வாயிலாக பேச வேண்டாம். பிரச்சினை எதுவாக இருந்தாலும் நேர்மையான, வெளிப்படையான விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். நாம் அனைவரும் நேர்மையாக விவாதிப்போம்.
நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் நாம் ஒற்றுமையாக இருந்தால், கட்சி நலனில் மட்டும் கவனம் செலுத்தினால் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அது பயன்மிக்கதாக அமையும்.
தவறான வெளியுறவு கொள்கையால் நாடு பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. நாம் எல்லையில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளமே நாட்டின் சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவுதான்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் ஒரே பதில் சொத்துக்களை விற்று விடுவதாகும். அதன் ஒற்றை புள்ளி நிகழ்ச்சி நிரல் விற்க, விற்க, விற்க என்பதாகும்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் பா.ஜனதாவின் மனநிலையயை காட்டுகிறது. விவசாயிகளின் எதிர்ப்பை அந்த கட்சி எப்படி உணர்கிறது என்பதை இது காட்டுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் கொலைகள் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் மீது தாக்குதலை நடத்துவதை இலக்காக வைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. இது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு சோனியாகாந்தி கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2019-ம் ஆண்டு சோனியா காந்தி தற்காலிக தலைவர் பொறுப்பை ஏற்றார்.
காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியாகாந்தி இருந்து வரும் நிலையில் கட்சி முழுநேர தலைவர் பதவிக்கு 2022 செப்டம்பரில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் செயற்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.