நாடு முழுவதும் மதுவிலக்கு! – பிரதமருக்கு கடிதம் எழுதிய சென்னை மாணவர்
மதுவிலக்கு குறித்து போராடி வரும் பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் (வயது 10), சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டு காலமாக மதுவுக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இந்த 3 ஆண்டு கால பிரசாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, முழுமையான மது இல்லாத நாடு சாத்தியம் என்பதை உணர்ந்தேன். எனவே நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
அத்துடன் மத்திய-மாநில பாடத்திட்டத்தில் குறிப்பாக 8 மற்றும் 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மது மற்றும் போதைப்பொருட்களின் அபாயங்கள் குறித்து விரிவான பாடமும் இடம்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் இதுகுறித்து கடிதம் அனுப்ப உள்ளேன். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதில் இருந்து வேட்பாளர்கள் வெற்றி செய்தி அறிவிக்கும் வரை தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கு நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மது இல்லா சமுதாயத்தை உருவாக்கிட தொடர்ந்து என் பிரசாரம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.