X

நாடு இதுவரை கண்டிராத வெற்றிகரமான நிர்வாகி பிரதமர் மோடி தான் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றியது தொடர்பாக, டெல்லியில் நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி 20 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த நிர்வாக அனுபவமும் இல்லாமல் குஜராத் மாநில முதல்-மந்திரி ஆனார். அப்போது, புஜ் நில நடுக்கத்தில் இருந்து மீண்டுவர குஜராத் தடுமாறிய நேரம்.

இருப்பினும், மின்சார நிலைமையை சீர்படுத்தினார். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுத்து நிறுத்தினார். அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து 10 ஆண்டுகளாக, விவசாய துறையில் 10 சதவீத வளர்ச்சியை உருவாக்கினார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அப்போது, அவர் பிரதமராக கருதப்படாத நிலையில், ஒவ்வொரு மத்திய மந்திரியும் தங்களை பிரதமராக நினைத்துக்கொண்டனர். மொத்தம் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்தது. ஜனநாயக நடைமுறையே சீரழியும் நிலை காணப்பட்டது.

இந்தநிலையில்தான், 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனார். அதன்பிறகு நிலைமை முன்னேறும் என்று மக்கள் கருதத் தொடங்கினர்.

பிரதமர் மோடி தன்னை ஒரு தலைமை சேவகராகவே கருதுகிறார். ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு நாடு இதுவரை காணாத மிகவும் வெற்றிகரமான நிர்வாகி, மோடிதான். அவர் நாட்டை வேறு மட்டத்துக்கு உயர்த்தி இருக்கிறார்.

பணமதிப்பிழப்பு அறிவித்தபோது, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய ஆபத்து இருந்தது. இருப்பினும், அது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று மக்கள் புரிந்து கொண்டு ஆதரித்தனர்.

முத்தலாக் ஒழிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, துல்லிய தாக்குதல் எல்லாமே துணிச்சலான நடவடிக்கைகள். இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை உயர்த்தி இருக்கிறார். ராமர் கோவில் தீர்ப்பு வந்தபோது ஒரு கலவரம் கூட நடக்காமல் பார்த்துக்கொண்டார்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.