Tamilசெய்திகள்

நாசாவின் அழைப்பை நிராகரித்த பீகார் மாணவர்!

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி (வயது 19). இவரது தந்தை பிரேம் ரஞ்சன் குன்வார் விவசாயி. ஏழை குடும்பத்தில் பிறந்த கோபாலுக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அரசு பள்ளியில் படித்த அவர் புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

கோபால்ஜி 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது முயற்சி பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் (என்.ஐ.எப்.) அனுப்பப்பட்டார். இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்.

அவர் வாழை இலை கழிவில் இருந்து வாழை உயிர் செல், காகித உயிர் செல், அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய கோபோனியம் அலாய் ஆகியவற்றை உருவாக்கி இருந்தார். தனது 10-ம் வகுப்பின்போது ‘இன்ஸ்பயர்’ விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கோபால்ஜிக்கு அழைப்பு விடுத்தது. துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் அழைப்புவிடுத்தன. இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல், ‘இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் இருந்தார்.

இதுபற்றி கோபால்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது முயற்சிகளுக்கு என்னுடைய தந்தை உதவியாக இருந்தார். வாழை இலை கண்டுபிடிப்புக்கு பிறகு, வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கின. கோபோனியம் அலாய் கண்டுபிடிப்புக்கு நாசா அழைப்புவிடுத்தது, ஆனால் அதனை நிராகரித்துவிட்டேன். அமெரிக்க விஞ்ஞானிகளும் என்னை சந்திக்க வந்தார்கள். இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன்.

இந்திய அறிவியல் மற்றும் புதுமைகளுக்காக 12-ம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனநிலையை வளர்ப்பதே எனது முக்கிய திட்டம். தற்போது டேராடூனில் உள்ள கிராபிக் எரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறேன். எனது முக்கிய நோக்கம் 100 ஆராய்ச்சி மாணவர்களை கண்டுபிடிப்பது ஆகும். நாடு முழுவதும் ஒரு குழுவாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோபால்ஜி ஏற்கனவே வாழை மற்றும் காகித உயிர் கலங்களுக்கு காப்புரிமைகளை பெற்றுள்ளார். நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் போன்ற மற்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *