நாங்குநேரி மாணவர் தாக்குதல் – போலீசார் விளக்கம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது18) என்ற மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்வியை தொடர்ந்தார். தற்போது சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு அவர் படித்து வருகிறார். அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பெருமாள்புரம் திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று மாலை தனது நண்பன் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அவரை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த் நகரில் வைத்து சிலர் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாகவும் அவர் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லேசான காயங்களுடன் இருந்த அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

இதனிடையே அவரை தாக்கிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக மாணவன் சின்னதுரையிடம் விசாரித்த போது, இணையதள செயலி மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவர் திருமண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று தன்னை அழைத்ததாகவும், அதன்படி அப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு திடீரென வந்த கும்பல் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் பி.என்.எஸ். 309(பி) காயத்தை ஏற்படுத்தி சொத்துக்களை வழிப்பறி செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவ தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools