நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை அடுத்த அம்பலம் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வீட்டில் வைத்து ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக ஒரு தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வீட்டிற்கு திரண்டு வந்தனர். வீட்டில் சரவணகுமார் எம்.எல்.ஏ. உள்பட சிலர் இருந்தனர்.
அப்போது அவர்கள், நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், நீங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வருகிறது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரவணகுமார் எம்.எல்.ஏ. உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து 4 பேரையும் அந்த வீட்டில் வைத்து பூட்டி பொதுமக்கள் சிறைவைத்தனர்.
இதையடுத்து அம்பலம் பகுதியில் தேர்தல் தொடர்பாக பிரச்சனை நடப்பதாக அறிந்த நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சரவணகுமார் எம்.எல்.ஏ.வையும், மற்றவர்களையும் விடுவித்தனர்.
அப்போது அந்த அறையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 139 நோட்டுக்கள் சிதறிக்கிடந்தது. அதில் மொத்தம் ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் இருந்தது. அதை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் சரவணகுமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் வந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சுடலைகண்ணன் மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.
அதில் சரவணகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் தேர்தல் பிரசார பாணியில் இருந்தபோது 25-க்கும் மேற்பட்டவர்கள் அத்துமீறி நுழைந்து எங்களை சரமாரி தாக்கி செலவுக்கு வைத்திருந்த பணத்தையும் அபகரித்து வீசி எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளனர். அந்த புகார் தொடர்பாக மூலக்கரைபட்டி போலீசார் விசாரணை நடத்தி 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிந்தனர்.
இந்த நிலையில் ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பறக்கும்படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சரவணன் எம்.எல்.ஏ . உள்பட 7 பேர் மீது 5 பிரிவுகளில் மூலக்கரைபட்டி போலீசார் இன்று வழக்குப்பதிந்தனர்.