டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. தற்போது அந்த கூட்டணி உடைந்து ள்ளது. இதன் காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கிறது. எனவே வலுவான கூட்டணியில் இடம்பெற திட்டமிட்டுள்ளோம். அது எண்ணிக்கை மற்றும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும். தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.
2019-ல் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் நாங்கள் இடம்பெற்றோம். தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது இல்லை. புதிய அரசியல் சூழல் நிலவுகிறது. புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாக செயல்பட நினைக்கிறது. பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட் டணி என்பது காலம் கடந்துவிட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாங்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.
தமிழகத்தில் தற்போது 3 அணிகள் உள்ளன. நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம்பெறுவோம். பாராளுமன்றத்தில் எங்களது குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கம் ஆகும். இம்முறை நாங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.