X

நாங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்! – விராட் கோலி

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்கி விளையாடி வருகிறது. 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதால், கேப்டன் விராட் கோலி இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரின்போது பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால் இந்திய அணி சொற்ப ரன்களில் வெற்றி வாய்ப்புகளை இழந்தது. இதனால் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 6-வது பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்தார்.

இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, அஸ்வின் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியா விளையாடியது. பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத நிலையிலும், நேர்த்தியாக பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

நான்கு பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 31 ரன்னில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

வெற்றிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் “டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை காப்பது முக்கியமானது. நாங்கள் பேட் கம்மின்ஸை வீழ்த்திய பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. நான் ஐஸ் போன்று கூலாக இருப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் விளையாடும்போது அவர்கள் ஒரு தவறு செய்ய வேண்டும். அல்லது நாங்கள் ஒரேயொரு சிறந்த பந்து வீச வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. நான்கு பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தது மிகப்பெரிய பெருமையான விஷயம்.

இந்த தொடரில் எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல நிலைமைக்கு உயர இது உதவியாக இருக்கும். புஜாரா மற்றும் ரகானே இந்த போட்டியை அருமையாக கொண்டு சென்றனர். நாங்கள் சிறந்த அணி. இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். இதேபோல் புஜாரா மற்றும் ரகானே இணைந்து விளையாடினார்கள், எங்களின் மிகவும் திடமான ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள்.

மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கனும். பெர்த் டெஸ்டிற்கு செல்லும்போது இதுகுறித்து யோசிப்போம். முதல் போட்டியிலேயே 1-0 என முன்னிலைப் பெற்று தந்த பிறகு, அதை நான் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும்.” என்றார்.