ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கவில்லை. பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். ஏனெனில் இது 300 ரன்களுக்கு மேல் எடுக்க வாய்ப்புள்ள ஆடுகளம். அதனால் 289 ரன்கள் இலக்கை சேசிங் செய்து விடலாம் என்று கருதினேன். ரோகித் சர்மா அற்புதமாக ஆடினார். டோனி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். ஆனால் இன்னும் வேகமாக ரன் சேர்த்து இருக்கலாம்.
டோனி ஆட்டம் இழந்ததும் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி உருவாகி விட்டது. இன்னொரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால், இலக்கை நெருங்கியிருக்க முடியும். தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பெரும் பின்னடைவாக அமைந்தது’ என்றார்.
சதம் அடித்த இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், ‘பேட்டிங்கில் 4-வது வரிசையில் விளையாடுவதற்கு டோனி மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று நான் எப்போதும் நினைப்பது உண்டு. ஆனால் அம்பத்தி ராயுடு, 4-வது வரிசையில் உண்மையிலேயே சிறப்பாக ஆடியிருக்கிறார். யாரை அந்த வரிசையில் இறக்குவது என்பது முழுக்க முழுக்க கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவை பொறுத்தது. தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால், டோனி 4-வது வரிசையில் பேட்டிங் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார்.
மேலும் ரோகித் சர்மா கூறியதாவது:-
இன்றைய (நேற்று) ஆட்டத்தில் டோனி மெதுவாக ஆடியதாக சொல்கிறீர்கள். 3 விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்த நிலையில் சிக்கலான கட்டத்தில் அவர் பேட்டிங் செய்ய வந்தார். அது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. இத்தகைய சூழலில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைப்பது எளிதான விஷயம் அல்ல. அதனால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு விளையாடினோம். நான் கூட வேகமாக ரன்கள் எடுக்கவில்லை. நானும் என்னை நிலைநிறுத்திக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் இன்னொரு விக்கெட் போயிருந்தால், நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.
டி.ஆர்.எஸ். அப்பீல் வாய்ப்பு கைவசம் இருந்திருந்தால், டோனிக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ. தீர்ப்பு மாற்றப்பட்டு இருக்குமே என்று கேட்கிறீர்கள். டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்துவதா? வேண்டாமா என்பதை களத்தில் சட்டென்று முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் சில நேரம் கணிப்பு தவறாக போய் விடுகிறது. அம்பத்தி ராயுடு, தனக்கு எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்ட அந்த பந்து லெக்-ஸ்டம்புக்கு வெளியே செல்வது போல் இருப்பதாக கூறினார். நானும் அப்படி தான் நினைத்தேன். அதனால் தான் அவருக்கு டி.ஆர்.எஸ்.-ன் படி முறையிட்டோம். அதற்கு பலன் கிடைக்கவில்லை. டி.ஆர்.எஸ்.-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அடிலெய்டு சென்றதும் அது குறித்து விவாதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போதைக்கு, இந்திய அணியில் 4-வது வரிசைக்கு அம்பத்திராயுடு தான் சரியான வீரராக இருப்பார் என்று விராட் கோலி கூறிய நிலையில், அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.