ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் முடிவடைவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டி நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் பிசிசிஐ-யின் விடா முயற்சியின் காரணமாக நாளை மறுநாள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் தொடங்க இருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலான வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க விரும்பவில்லை. போட்டியில் விளையாடுவதற்காக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த காலக்கட்டத்தில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்ததற்காக ஒவ்வொருவரும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு வளையம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் இதுபோன்ற விசயங்களை நினைத்திருக்க மாட்டீர்கள். நேராக வருவீர்கள். தொடரில் விளையாடுவீர்கள். ஆனால் தற்போது நமது சொந்த நிர்வாகம் நமக்காக இங்கே பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய விவரங்களுடன் அவர்கள் செயல்படுத்திய விஷயங்கள், அவர்களின் வேலையை இன்னும் பாராட்ட வைக்கின்றன.
தற்போதைய பாதுகாப்பு வளையத்தில் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். இந்த நேரத்தில் இந்த தொடர் நடத்த ஏற்பாடு செய்த விதம், மிகமிக கடினமானது. அவர்கள் எடுத்த முயற்சிக்கு பாரட்டுகள் தெரிவித்தாக வேண்டும். நாம் அனைவரும் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.