X

நாங்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தது சிறப்பானது – டி20 போட்டி வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் பேட்டி

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 80 ரன்னும், இஷான்கிஷன் 58 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் சிக்சர் அடித்தார். ஆனால் அது ‘நோ-பால்’ ஆக வீசப்பட்டதால் சிக்சர் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

மைதானத்தில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் நெருக்கடியில் இருந்தோம். ஆனால் அதில் இருந்து ஒவ்வொரும் மீண்டு வெற்றி பெற்றது சிறப்பானது. கேப்டன் பொறுப்பு என்பது ஒரு பெருமையான தருணம். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். இன்று நான் கேப்டனாக அறிமுகமாகி விளையாடியது மிகப்பெரிய தருணமாக நினைக்கிறேன். இந்த போட்டியின் போது 2-வது பாதியில் பனி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பனி தாக்கம் இல்லை. இந்த மைதானம் சிறியது என்று தெரியும். இதனால் 230 ரன்கள் இலக்கு வரும் என்று நினைத்தேன்.

ஆனால் கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர். 16-வது ஓவருக்கு பிறகு மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இது அற்புதமானது. இஷான் கிஷனிடம், இலக்கை பற்றி நினைக்காமல் உங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். 10 ஓவர்களுக்கு பிறகு சேசிங் செய்ய வேண்டிய ரன்கள் எவ்வளவு என்று பார்த்து கொள்ளலாம் என்று கூறினேன். இதனால் ரன் இலக்கை தொட முடிந்தது. ரிங்கு சிங் அருமையாக போட்டியை முடித்து வைத்தார். நான் கேப்டன்சியை டிரஸ்சிங் ரூமில் விட்டு விட்டேன். நான் 10 அல்லது 40 பந்துகளில் பேட்டிங் செய்தாலும் ரசித்து விளையாட முயற்சித்தேன். மைதானத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு அணிகள் மோதும் 2-வது இருபது ஓவர் போட்டி 26-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

Tags: tamil sports