X

நாக்கை அறுப்பதாக பேசிய பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு

மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மதுரை சிலைமான் பகுதியில் உள்ள கல்லம்பல் வில்வநாதர் கோவிலில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கடந்த 7-ந் தேதி சிறப்பு பூஜை நடந்தது. இதில் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மகா. சுசீந்திரன் கூறுகையில், இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காகவே ஒரு கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுய லாபம்-அரசியல் ஆதாயத்திற்காக, இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர்.
அதனை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனைத் துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்றார்.

இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் மகா. சுசீந்திரன் மீது, சிலைமான் போலீசார், பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, சட்டம்-ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.