X

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தீ விபத்து – பயனிகள் அலறியடித்து ஓட்டம்

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் ரெயில்கள், கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள், இங்கிருந்து புறப்படும் ரெயில்கள் போன்றவற்றால், பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அந்த நேரத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைமேடைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். காலையிலேயே பணிகளை தொடங்கும் அவர்கள், தங்களது பணிக்கான உபகரணங்கள் மற்றும் பிளிச்சிங் பவுடர், ஆசிட் போன்றவற்றை ரெயில் நிலையத்தில் படிக்கட்டின் கீழ் உள்ள அறையில் வைத்துள்ளனர்.

காலையில் பணிக்கு வந்ததும், அந்த அறை கதவை திறந்து பொருட்களை எடுத்து செல்வது வழக்கம். பின்னர் மாலையில் அதனை அறையில் வைத்துச் செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை 6.50 மணியளவில் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். புகை மூட்டம் வந்ததை பார்த்த பயணிகள் பலரும் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் துப்புரவு பணியாளர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

தொடர்ந்து அந்த அறையின் பூட்டை திறந்தனர். அப்போது உள்ளே பொருட்கள் தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் மேலும் தீ பரவாமல் நடவடிக்கை எடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அறையில் ஒரு சுவிட்ச் மட்டுமே உள்ளது. அந்த அறை எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். காலையில் துப்புரவு பணிக்கான பொருட்கள் எடுக்கப்பட்ட பிறகு அறையை பூட்டி விடுவார்கள். இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்து அறையை திறப்பதற்கு முன்பே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: tamil news