தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து அண்ணாமலை குறைகளை கேட்டு வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை 2-நாள் பாதயாத்திரை மேற்கொண்டார்.
இன்று 3-வது நாளாக நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அண்ணாமலை பாத யாத்திரை சென்றார். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். அண்ணாமலை பாதயாத்திரையில் ஏராளமான பெண்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கையில் கட்சிக்கொடியை ஏந்தியவாறு அண்ணாமலையுடன் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்தனர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். வழி நெடுகிலும் தொண்டர்கள் அண்ணாமலையை பூக்கள் தூவி வரவேற்றனர். அப்போது குழந்தைகள், பெண்கள், கட்சி நிர்வாகிகள் அண்ணாமலையுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர்.
பார்வதிபுரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் வழியாக வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலையை வந்தடைந்தார். அங்கே தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், பொருளாதார பிரிவு தலைவர் ஐயப்பன், நாகர்கோவில் கிழக்கு மாநகர் முன்னாள் பொருளாளர் திருமால், தொழிலதிபர் நாஞ்சில் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் ரோஸிட்டா, ரமேஷ், ஆச்சியம்மாள், ஆன்றோனை ட்ஸ்னைடா, தினகரன், சதீஷ், வீர சூர பெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன், நகர முன்னாள் துணைத் தலைவர் மாரியப்பன், தெற்கு மாநகர் முன்னாள் செயலாளர் ஸ்ரீதர், நாகர்கோவில் வடக்கு பகுதி செயலாளர் திவ்யா சிவராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டதையடுத்து கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது. போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலை வருகையடுத்து நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. பிளக்ஸ் போர்டுகளை அகற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படவில்லை. நேற்று நள்ளிரவு புதிதாக பிளக்ஸ் போர்டு வைக்கவும் அனுமதிக்கவில்லை. பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று மாலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து மாலை 4 மணிக்கு பாதயாத்திரை தொடங்கும் அவர், மகாதானபுரம் வழியாக கொட்டாரத்தில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார்.