நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் கப்பலில் பயணிப்பது எப்படி? – இதோ முழு விவரம்
நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 டிக்கெட் (ரூ.6500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.7670) விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
முதல் நாள் பயணத்துக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி, 75 சதவீத சிறப்பு சலுகையுடன் ரூ.2,803 மட்டும் வசூலிக்கப்பட்டது.
இந்தப் பயணிகள் கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுபோக குளுகுளு ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன. இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின் வட கிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மார்ச் மாதம் முதல் தினமும் போக்குவரத்து தொடங்க உள்ளது.