அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன. இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. நிர்வாகம்-பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றன.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சோனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கி ஊழியர்களிடையே பரவலாக கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வருகிற 19-ந் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.