X

நவம்பர் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கப்படுகிறது

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் தெற்கு ரெயில்வேயால் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், தற்போது 2-வது அலை பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. மேலும், தியேட்டர்களிலும், 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டு விட்டன.

மேலும், மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். பஸ்களும் 100 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரெயில்கள் எப்போது இயக்கப்படும்? என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே இருந்தது வந்தது.

கொரோனா தொற்றின் காரணமாக, ரெயில்களில் மட்டும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு இருக்கைகளாக இயக்கப்படுவதால், பயணிகள் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி, ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரெயில்களை இயக்கமுடியும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மேலும், ஏற்கனவே தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர், நவம்பர் மாதம் தொடக்கத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் வழக்கமான ரெயில்கள் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்தவகையில், முதற்கட்டமாக தெற்கு ரெயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை நவம்பர் 1-ந் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

* ராமேசுவரம்-திருச்சி (வண்டி எண்:06850), திருச்சி-ராமேசுவரம் (06849), எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஜோலார்பேட்டை (06089), ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (06090), பாலக்காடு-திருச்சி (06844), திருச்சி-பாலக்காடு (06843), நாகர்கோவில்-கோட்டயம் (06366), கோட்டயம்-நிலாம்பூர் சாலை (06326), நிலாம்பூர் சாலை-கோட்டயம் (06325) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.

* திருவனந்தபுரம்-சோரணூர் (06302), சோரணூர்-திருவனந்தபுரம் (06301), கண்ணூர்-ஆலப்புழா (06308), ஆலப்புழா-கண்ணூர் (06307), திருவனந்தபுரம்-திருச்சி (02628), திருச்சி-திருவனந்தபுரம் (02627), எர்ணாகுளம்-கண்ணூர் (06305), கண்ணூர்-எர்ணாகுளம் (06306), கண்ணூர்-கோவை (06607), கோவை-கண்ணூர் (06608), திருவனந்தபுரம்-குருவாயூர் (06342), குருவாயூர்-திருவனந்தபுரம் (06341) ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நவம்பர் 1-ந் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.

* மேலும், மங்களூரு-கோவை (06324), கோவை-மங்களூரு (06323), நாகர்கோவில்-கோவை (06321), கோவை-நாகர்கோவில் (06322) ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நவம்பர் 10-ந் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தற்போது முதல்கட்டமாக தெற்கு ரெயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் ரெயில்களை முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல் தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து ரெயில்களையும் வழக்கமான ரெயில் சேவைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், தெற்கு ரெயில்வேயின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.