நவம்பர் மாதம் சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு – மாநகராட்சி ஆணையர்

சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே சாலையில் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் 2-ம் கட்ட மருத்துவ முகாமை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் ‘ஜீரோ சர்வே’ மூலம் 2-வது கட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர்களுக்கு 68 நாட்களுக்கு பிறகு மீண்டும், எந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை கண்டறியும் ஆய்வை தொடங்கி உள்ளோம்.

தமிழகத்தில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இரவு நேரங்களிலும் மருத்துவ முகாமை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூரில் எந்தளவு பாதிப்பு ஏற்படுகிறதோ, அதேஅளவுக்கு பரிசோதனையையும் அதிகப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் 57 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஏறக்குறைய 30 லட்சம் பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்ற நடவடிக்கைகளை இன்னும் 3 முதல் 4 மாதங்கள் தொடர்ந்து செய்தால் மட்டும்தான் நல்ல முடிவு கிடைக்கும்.

இதுவரை 30 லட்சம் பேர் வீட்டு தனிமையை முடித்துள்ளனர். இன்றைய தினத்தில் 2¼ லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். சென்னையில் பரிசோதனை விகிதம் 3 மடங்குக்கு மேல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனையில் 16 லட்சத்தை நெருங்கி உள்ளோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 9 சதவீதமாக இருக்கும் தொற்று விகிதம், இந்த மாத இறுதிக்குள் 7 முதல் 6 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முககவசம் அணியாமல் மக்கள் அலட்சியம் செய்கிறார்கள்.

முககவசம் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு மருந்து. இன்னும் 3 மாத காலத்துக்கு முககவசம் கட்டாயம் பொது மக்கள் அணிய வேண்டும். சென்னையில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2.25 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை, காவல்துறையுடன் சேர்ந்து முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்படும். இதேபோல் கடைகள் மற்றும் ஓட்டல்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் ஒரு மாத காலத்துக்கு மூடி ‘சீல்’ வைக்கப்படும்.

சென்னையில் ஒரு தெருவில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 2 அல்லது 3 நபருக்கு தொற்று ஏற்பட்டாலே அந்த தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது.

சென்னையில் 2,500-க்கு மேல் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கடந்த 87 நாட்களாக ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஒரே சீராக இருந்து வருவதே தொற்று அபாய காலத்தில் ஒரு சாதனையாக தான் சொல்ல வேண்டும். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, நோய் தொற்று இரட்டிப்பு ஆக 93 நாட்கள் ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare