தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வைத்த படம் என்றால் அது ‘அறம்’ தான். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட் ஆட்சியர் வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைத்ததோடு, அவர் பேசும் அதிரடி வசனங்கள் மக்களிடம் சேரும் வகையில் அப்படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கோபி நயினாருக்கு பல வாய்ப்புகள் வந்தாலும், பொழுதுபோக்கு சினிமாவாக மட்டும் இன்றி, சமூகத்திற்கான சினிமாவாகவும் தான் இயக்கும் படங்கள் இருக்க வேண்டும், என்பதால் தனது முதல் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனாலும், அடுத்தப் படத்திற்காக அவசரப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் கோபி நயினாரை நேற்று போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் கோபி நயினார், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நேற்று போராட்டம் நடத்தினார்.
போராட்டம் நடக்கும் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு, அனுமதி வாங்காமல் நடத்தப்படும் போராட்டம் என்று கூறி தடுத்து நிறுத்தியதோடு, இயக்குநர் கோபி நயினாரை கைதும் செய்தனர்.