வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்டில் இந்தியாவின் பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் எடுபடவில்லை. அதேபோல் பேட்டிங்கிலும் சொதப்பினர்.
இந்திய பந்து வீச்சாளர்கள் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார்கள். ஒரேநாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை ரசிகர்கள் இழந்து விட வேண்டாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘இந்திய பந்து வீச்சாளர்கள் மீது நான் இன்னும் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நியூசிலாந்து தொடருக்கு முன் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து திரும்பியுள்ளார். திரும்பிய முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தினார். பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்தியாவின் பந்து வீச்சு யுனிட் உலகத்தரம் வாய்ந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பந்து வீச்சில் எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஒரே நாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். நியூசிலாந்து டாஸ் மிகமிக முக்கியமானது. என்றாலும் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஷாந்த் சர்மா மீண்டு வந்துள்ளது ஈர்க்கக்கூடியது. சர்வதேச அளவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், அவராகவே அவரை புதுப்பித்துக் கொண்டு சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.