நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். போலியான கடிதம் வெளியானதாக கூறப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி ஆணையிட்டார்.
நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்தவும் சட்டமன்ற செயலருக்கு ஆளுநர் கோய்ஷாரி கடிதம் அனுப்பினார். ஏற்கனவே மகாராஷ்டிரா ஆளுநரை பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, நாளைய சிறப்புபேரவை கூட்டத்தை வீடியோபதிவு செய்ய வேண்டும் எனவும் மகாராஷ்டிரா ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுவில், 16 எம்எல்ஏ தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆளுநர் ஆணை சட்டவிரோதமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.