திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த ராசு மகன் ராஜா (25). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் அங்குள்ள தோட்டத்தில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு தயாரித்து அதனை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த இடத்தில் தீ பிடித்தது. இதில் ராஜா மற்றும் கருப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 2 பேர் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆலையை நடத்தி வந்த நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.