நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய வம்சி என்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலின் பெனுமடா கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வம்சி என்ற வாலிபர் வந்தார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மணமக்களுக்கு பரிசை வழங்கிய வம்சி பதற்றமான நிலையில் இருந்தார். பின்னர் நண்பர்களிடம் ஏதோ சொல்ல வந்த வம்சி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு வம்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்த வாலிபர் வம்சி பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக உடற் பயிற்சி கூடங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மாரடைப்பால் வாலிபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி மற்றும் ஸ்டெராய்டுகள் ஆகியவை இளம் மாரடைப்புக்கு வழிவகுக்கும் காரணிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.