லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில், அறிமுக நாயகன் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா, ராஜு ஆகியோர் நடித்திருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ எப்படி என்பதை பார்ப்போம்.
சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருக்கும் மூன்று நண்பர்கள் வளர்ந்ததும் சேர்ந்து பிஸினஸ் செய்கிறார்கள். எப்போதும் ஒன்றாக இருக்கும் இவர்களது இளம் வயதில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக, தங்களது வாழ்க்கையில் பெண்களே வரக்கூடாது, என்ற முடிவு எடுப்பவர்கள், காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட அறியாமல் இருக்க, ஹீரோவின் நண்பர் ராஜுவுக்கு ரம்யா நம்பீசனை கண்டதும் காதல் மலர்கிறது. அவரை பின் தொடர்ந்து காதல் வளர்ப்பவர் அதையே வேலையாக வைத்திருக்கிறார். இது குறித்து நண்பர்கள் விசாரிக்கும் போது, அவர்களிடம் தனது ஒன்சைடு காதலை பற்றி கூறும் ராஜு, தான் காதலிக்கும் ரம்யா நம்பீசனையும் அவர்களிடம் காட்ட, அவரது அழகில் மயங்கும் ஹீரோ கவினுக்கும் ரம்யா நம்பீசன் மீது காதல் மலர்கிறது. நண்பனுக்கு துரோகம் செய்கிறோமே, என்ற எண்ணமே இல்லாமல், ரம்யா நம்பீசனிடம் தனது காதலை கவின் சொல்ல, அவரும் சட்டென்று ஓகே சொல்லிவிடுகிறார்.
இந்த விஷயம் ராஜுக்கு தெரிந்ததும் நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். ராஜுவும், அருண்ராஜா காமராஜாவும் பிஸினஸை கவனிக்க, ஹீரோ கவன் கழட்டிவிடப்படுகிறார். நண்பர்கள் போனால் என்ன என்று காதலியுடன் ஜாலியாக இருக்கும் கவினின் காதலில் சில பல பிரச்சினைகள் வர, அனைத்தும் முடிந்து ரம்யா நம்பீசனின் அப்பா திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட, நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்த நிலையில், திருமணமே வேண்டாம் என்று ரம்யா நம்பீசனை விட்டு கவின் பிரிகிறார். அவர் ஏன் ரம்யா நம்பீசனை பிரிகிறார், ரம்யா ஏன் அறிமுகம் இல்லாத கவினின் காதலை ஏற்றார், நட்பு மற்றும் காதல் இரண்டும் இல்லாமல் இருக்கும் கவினுக்கு இறுதியில் அது கிடைத்ததா இல்லையா, என்பது தான் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் மீதிக்கதை.
மூன்று நண்பர்களின் காதலும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. ரொம்ப எளிமையான கதை என்றாலும், இயக்குநர் சிவா அரவிந்த் அதை கையாண்ட விதமும், நடிகர்களின் பர்பாமன்ஸும், படத்தில் வரும் இயல்பான நகைச்சுவைகளும் படத்தை ரசிக்க வைக்கிறது.
ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கவின், அவரது நண்பர்களாக ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் ராஜு, அருண்ராஜா காமராஜா ஆகிய மூன்று பேருமே மொத்த படத்தையும் தூக்கி சுமந்திருப்பதோடு, ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார்கள்.
நட்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய நல்ல உள்ளம் படைத்தவராக இருக்கும் ஹீரோ கவின், நண்பனின் காதலிக்கே ரூட்டு போடுவதும், ஐ லவ் யு சொல்வதும் என்று திடீரென்று அதிர்ச்சியை கொடுத்தாலும், தொடர்ந்து நட்புக்காக ஏங்குவது என்று அவரது இயல்பான நடிப்பு இனிப்பு போல இனிக்கிறது.
ஹீரோவின் நண்பர் என்றாலும், ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் ராஜு மற்றும் அருண்ராஜா காமராஜா இருவரும் சோகமான காட்சிகளில் கூட தங்களது டயலாக் டெலிவரி மற்றும் பர்பாமன்ஸ் மூலம் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும், அருண்ராஜா காமராஜா கோபத்தில் பேசும் சில வித்தியாசமான வசனங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.
கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், வெகுளித்தனமான நடிப்பால் நம்மை கவர்ந்துவிடுகிறார். அதிலும், பீருக்கும் பிராண்டிக்கும் வித்தியாசம் தெரியாமல், ”பெரிய பாட்டில குடிக்காதீங்க, சின்ன பாட்டில் போதும்”, என்று கூறும் அவரது அப்பாவித்தனமான நடிப்பு அடேங்கப்பா…என்று சொல்ல வைக்கிறது.
அழகம்பெருமாள், இளவரசு உள்ளிட்டவர்கள் வழக்கம் போல தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தரணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் தான் என்றாலும், சாதாரண வார்த்தைகளுக்கு மெட்டுப் போட்டு அதை பாட்டாக்கி ஒலிக்கவிட்டதற்காக பாராட்டலாம். யுவராஜின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
உயிருக்கு உயிரான நட்பு, நண்பர்களின் பிஸினஸ் பிறகு காதலால் நட்பில் ஏற்படும் பிளவு என்று ரெகுலர் பார்மெட்டில் படம் தொடங்கினாலும், இதுபோன்ற படங்களில் இடம்பெறும், காதல் தோல்வியால் பெண்களை திட்டுவது, துரோகம் செய்த நண்பனை துரோகியாக நினைத்து பழிவாங்க துடிப்பது போன்ற புளித்துப்போன விஷயங்களை தவிர்த்துவிட்டு அடுத்தடுத்த காட்சிகள் மூலம் படத்தை வித்தியாசமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த்.
நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டாலும், அதை ஜாலியாக கையாண்டிருக்கும் இயக்குநர் இடைவேளைக்கு பிறகு காட்சிக்கு காட்சி நம்மை சிரிக்க வைத்து வயிறு வலியே ஏற்பட வைத்துவிடுகிறார். அதிலும், அருண்ராஜா காமராஜின் முட்டால்தனத்தை வைத்து கையாளப்பட்டிருக்கும் காமெடி காட்சிகளும், ஹீரோ மற்றும் அவரது காதலால் நண்பர்களுக்கு ஏற்படும் சிக்கலும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. காதல் தோல்வியால் விஷம் குடிப்பதை கூட ரொம்ப நகைச்சுவையாக கையாண்டிருக்கும் இயக்குநர் சிவா அரவிந்த், இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு காதல் பிளஸ் காமெடி படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ இரண்டு மணி நேரம் நான் ஸ்டாப்பாக நம்மை சிரிக்க வைக்கும் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமாக உள்ளது.
-ஜெ.சுகுமார்