நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் கைது

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மார்ட்டின் செபாஸ்டின். சினிமா தயாரிப்பாளர். மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்து உள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மார்ட்டின் செபாஸ்டின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். மார்ட்டின் செபாஸ்டின் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 2000-ம் ஆண்டு இந்த சம்பவங்கள் நடந்ததாகவும் கூறி இருந்தார். மேலும் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாகவும் புகார் கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை மார்ட்டின் செபாஸ்டின் மறுத்தார். மேலும் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, எர்ணாகுளம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து போலீசார் மார்ட்டின் செபாஸ்டினிடம் விசாரணை நடத்தினர். 72 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். பாலியல் புகாரில் சினிமா தாயரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின் கைது செய்யப்பட்டது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools