சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் அவ்வப்போது போலி கணக்கு தொடங்கப்படுவதும், பின்னர் அது சர்ச்சையாகி வருவதும் நடந்துள்ளது. அந்தவகையில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், இதுபோன்ற பிரச்சனையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வித்யாபாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘எனது பெயரில் மர்ம நபர் ஒருவர் ‘வாட்ஸ்-அப்’ மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். ‘வாட்ஸ்-அப்’பில் எனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு, நான் தான் வித்யாபாலன் எனச் சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அதுபோன்ற நபர்களிடம் இருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்’, என்று கூறியுள்ளார்.
மேலும், ‘இதுகுறித்து தனது குழுவினர் புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம். அப்படி அந்த போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.