கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
மேலும் கொச்சியில் நடிகை லீனாமரியா பால் பியூட்டி பார்லரும் நடத்தி வருகிறார். இவரது பியூட்டி பார்லருக்கு நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பியூட்டி பார்லர் மீது சுட்டார். பிறகு அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
துப்பாக்கி சூடு நடந்தபோது அந்த பியூட்டி பார்லரில் 2 பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். துப்பாக்கி குண்டு சத்தம் பயங்கரமாக கேட்டதால் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. காமிராவில் துப்பாக்கியால் சுடும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது.
அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது. அங்கிருந்த தடயங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். ஒரு துண்டு பேப்பரில் ரவி பூஜாரி என்ற பெயரும், சில மிரட்டல் வாசகங்களும் இந்தியில் எழுதப்பட்டு கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பியூட்டிபார்லரில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி விசாரணை நடத்த நடிகை லீனாமரியா பாலின் செல்போன் நம்பரில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் ஐதராபாத்தில் தற்போது இருப்பது தெரியவந்தது.
அவரிடம் போனில் போலீசார் விசாரணை நடத்தியபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகையை சிலர் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அப்போது மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி பூஜாரி பெயரை சொல்லி தங்களுக்கு ரூ.25 கோடி தரும்படி கூறி மிரட்டி உள்ளனர். ஆனால் அதற்கு நடிகை லீனாமரியா பால் மறுத்துள்ளார்.
மேலும் தன்னை மாபியா கும்பல் மிரட்டியது பற்றி அவர் போலீசிலும் புகார் செய்தார். எனவே அந்த மாபியா கும்பல்தான் தன்னை மிரட்டி பணம் பறிக்க துப்பாக்கி சூடு நடத்தியதாக நடிகை போலீசாரிடம் தெரிவித்தார். அவரை போலீசார் கொச்சிக்கு விசாரணைக்கு வரும்படி கூறியதால் அவரும் கொச்சி விரைந்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை லீனாமரியா பால் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் இருப்பதும் இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் லீனா மரியா பால் ரூ.18 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
துணி வியாபாரி ஒருவரிடம் ரூ.62 லட்சத்து 47 ஆயிரத்திற்கு ஜவுளி வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த வழக்கில் லீனாமரியா பாலும், அவரது தோழி சுக்ஷா என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி. தினகரன் தரப்புக்கு பெற்றுத் தர தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ்சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது காதலிதான் நடிகை லீனாமரியா பால் என்பது குறிப்பிடத்தக்கது.