2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு
அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டு படவாய்ப்புகளும் குவிந்து வந்தன.
எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர், பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார்.
இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திருமணம் செய்து கொள்வதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் அம்மாவும்
அப்பாவும் அதற்கு சம்மதித்துள்ளனர். இது செட்டில் ஆகும் நேரம். இருப்பினும், திரைப்படங்களில் இருந்து விலகப் போவதில்லை. எனக்கு சினிமா பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான் உங்கள்
அனைவரையும் மகிழ்விப்பேன். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும், சிலர் இன்று ஏப்ரல் 1-ஆம் தேதி என்பதால் இது அவருடைய குறும்பு தனமாக கூட இருக்கலாம் என்று தெரிவித்து
வருகின்றனர்.’