நடிகை சாய் பல்லவியின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணா நடித்துள்ள விராட பர்வம் திரைப்படம் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நக்சல் தலைவர் என்ற கேரக்டரில் ராணா நடித்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது பேசிய நடிகை சாய்பல்லவி, “எனது குடும்பத்தினர் எந்த கொள்கையையும் சாராதவர்கள். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் எனது குடும்பத்தினரால் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்க வேண்டும். இடது சாரிகள், வலது சாரிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது.

காஷ்மீர் பண்டிட்டுகள் அனுபவித்த கொடுமைகளை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் கூறியிருந்தார்கள். மத அடிப்படையில் இந்த சம்பவங்களை நீங்கள் அணுகினால், சமீபத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய டிரைவர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறி தாக்கினார்கள். காஷ்மீர் பண்டிட் பிரச்சனை, இஸ்லாமிய டிரைவர் மீதான தாக்குதல் இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்? நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம்.

நான் மிகவும் நடுநிலையானவள். எனவே நான் நம்புவது என்னவென்றால், நீங்கள் என்னை விட வலிமையானவராக இருந்தால், நீங்கள் என்னை ஒடுக்குகிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஒரு சிறிய கூட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒடுக்குவது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools